முஃஜிஸாத் என்றால் என்ன?
1.கராமத்து என்றால் என்ன?
அவ்லியாக்களுக்கு வழங்கப்பட்ட கராமத்துகள்
உண்மையாகும். அதே வேளையில் வழமைக்கு மாற்றமாக நடக்கக்கூடிய காரியங்கள் எல்லாம்
கராமத்துமல்ல. மாறாக அதில் சில ஷைத்தானுடைய தாக்கத்தால் நடப்பவையும் இருக்கும்.
ஒரு கராமத்து குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும்
ஒத்து போகின்றதா இல்லையா என்பது தான் அதற்கான வரையறை. வழமைக்கு மாற்றமாக நடக்கக்கூடிய காரியங்களுக்கு
முஃஜிஸாத் என்றும் "கராமத்" என்றும் கூறுவதுண்டு.
முஃஜிஸாவைப் பொறுத்தவரை அது
நபிமார்களுக்குரியதாகும். அவர்களிடமிருந்து வெளியாகும் அற்புதங்களுக்குத்தான்
பெரும்பான்மை அறிஞர்கள் முஃஜிஸா என்று கூறியுள்ளார்கள். கராமத்து என்பது வலிமார்களுக்கு வழங்கிய
சிறப்பாகும்.
நூல்: ஷரஹ் தஹாவியா - 468
2. வழமைக்கு மாற்றமாக நடக்கக்கூடிய அனைத்தும்
கராமத் ஆகுமா?
வழமைக்கு மாற்றமாக நிகழக்கூடிய அனைத்தும்
கராமத்து என்று கூறுவது தவறாகும். இத்தகைய நம்பிக்கை அறியாமைக்கால மக்களின்
நம்பிக்கையாகும்.
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள்
கூறினார்கள்:
வழமைக்கு மாற்றமாக ஏதாவது அற்புதம் யாரிடமாவது
நிகழ்ந்தால், அவர்
அல்லாஹ்வின் அவ்லியா என்ற எண்ணம் பொதுமக்களிடம் இடம்பிடித்துள்ளது. இது தவறான
எண்ணமாகும் அற்புதங்கள் சூனியக்காரன், ஜோதிடன், புரோகிதர் போன்ற அசத்தியவாதிகளிடமும் நிகழலாம்.
எனவே அற்புதங்களை வைத்து அல்லாஹ்வின் அவ்லியாக்கள் விஷயத்தில் ஆதாரம்
தேடுபவர்களுக்கு இதனை வேறுபடுத்தி காட்டக்கூடிய அம்சம் தேவைப்படுகிறது. இது
தொடர்பாக அறிஞர்கள் கூறிய கருத்துகளில் மிகவும் பொருத்தமானது, அற்புதங்கள் யாரிடம் நிகழ்கிறதோ அவரது வாழ்க்கையை
சோதித்து பார்ப்பதாகும். அவர் அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்ட மார்க்க
கடமைகளை பின்பற்றி விலக்கப்பட்டவற்றை தவிர்ந்து கொள்ளவும் செய்வாரேயானால் அதுதான்
அவரது விலாயத்திற்கான அடையாளம். இதற்கு மாற்றமாக அவரது வாழ்க்கை இருந்தால் அவர்
அல்லாஹ்வின் அவ்லியா அல்ல.
நூல்: ஃபத்ஹுல் பாரி - 7/383
இமாம் நஸஃபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும், அவனது பண்புகளையும் அறிந்து அவனுக்கு
கட்டுப்படும் செயலில் மூழ்கி, அல்லாஹ்விற்கு
மாறு செய்வதை தவிர்ந்து கொண்டு, மனோ
இச்சையை பின்பற்றுவதையும், உலக
ஆசைகளில் மூழ்குவதையும் யார் தவிர்ந்து கொள்வாரோ அவர் தான் வலியாவார்.
நூல்: ஷரஹுல் அகாயித் - 136
ஜுனைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தண்ணீரில் நடப்பதையோ, காற்றில் பறப்பதையோ நீங்கள் கண்டு அவர் ஏவல், விலக்கல் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்
என்பதை நீங்கள் பார்க்காதவரை ஏமாந்து அவரை வலி என்று தீர்மானித்து விடாதீர்கள்.
நூல்: ஹாஷியத்துஸ்ஸாவாஜிர் - 2/56
ஒருவர் அற்புதங்களை நிகழ்த்தினால் அதனை
நிகழ்த்தக்கூடியவரை அல்லாஹ்வின் வலி என்று முடிவு செய்வதாக இருந்தால், அவர் செய்யும் அற்புதத்தை குர்ஆன், சுன்னாவோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மறைவான
விஷயத்தை தான் அறிவதாக ஒருவர் கூறினாலோ அல்லது அல்லாஹ்விற்கு மட்டுமே உரிய
பண்புகளில் சில தனக்கு இருப்பதாக வாதிட்டாலோ நிச்சயமாக அவர் வலியாக இருப்பதற்கு
வாய்ப்பில்லை. அவர் ஷைத்தானின் உதவியால் தான் அற்புதங்களை செய்கிறார் என்பது
உறுதி.
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தண்ணீரில் நடப்பதையோ, காற்றில் பறப்பதையோ நீங்கள் கண்டு அவரது
செயல்களை குர்ஆன், சுன்னாவோடு
ஒப்பிட்டுப் பார்க்காதவரை ஏமாந்து அவரை வலி என்று தீர்மானித்து விடாதீர்கள்.
நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்
கராமத்திற்கு சொந்தக்காரராக இருக்கக்கூடிய
ஒருவரைப் பொறுத்தவரையில் அவர் அதனை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி அதன் மூலம்
எவ்வித ஆதாயத்தையும், புகழ்ச்சியையும்
பெற விரும்பக்கூடியவராக இருக்கமாட்டார். அப்படி நடந்து கொள்பவர் வலியாகவும்
இருக்கமாட்டார்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்
கூறினார்கள்:
நிச்சயமாக விலாயத்தின் நிபந்தனையை
சார்ந்ததுதான் கராமத்துகளை மறைத்துவைப்பது என்பது. நுபுவ்வத் மற்றும் ரிஸாலத்
ஆகியவற்றின் நிபந்தனை அதனை வெளிப்படுத்துவதாகும். இதன் மூலம் தான்
நுபுவ்வத்திற்கும், விலாயத்திற்கும்
உரிய வேறுபாடு முடிவு செய்யப்படும்.
நூல்: குனியத்து தாலிபீன் - 2/163
கராமத்திற்கான ஆதாரம், மர்யம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கராமத்து குறித்து இவ்வசனம் பேசுகிறது.
قَالَتْ هُوَ مِنْ عِنْدِ
اللّٰهِ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ
هٰذَا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا
زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا فَتَقَبَّلَهَا رَبُّهَا
بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا
அவளுடைய இறைவன் அவள்
பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச்
செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை
ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள்
(தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக்
கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு
எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து
கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
(அல்குர்ஆன் : 3:37)
நபி(ஸல்)
அவர்களும் பல்வேறுபட்ட மக்களுடைய கராமத்துகளை குறித்து நவின்றுள்ளார்கள். குகையில்
அகப்பட்ட நபர்களை குறித்து கூறினார்கள்:
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
'(முன்காலத்தில்)
மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள
குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக்
கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றனர்.
அவர்களில்
ஒருவர், 'இறைவா
எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு
மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால்
கறந்து, பால்
பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள்.
பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும்
கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான்
விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை
நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய
திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள்
வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி)
இடைவெளி உண்டானது.
மற்றொருவர், 'இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின்
மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ
அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார்
தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு
கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி
முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு
நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ
அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு' எனக்
கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும்
மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.
மற்றொருவர், 'இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு
வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக்
கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும்
விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின்
அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர்
என்னைக் கேலி செய்கிறீரா? என்று
கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை
உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக
நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு' எனக்
கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.'
அறிவிப்பாளர்:
இப்னு உமர்(ரலி) நூல்:
ஸஹீஹுல் புகாரி : 2215, 2333, 3465.
நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர்
ஒரு காட்டு நிலத்தில் இருந்த போது, ஒரு
மேகத்தினிடையே "இன்ன மனிதரின் தோட்டத்திற்கு நீர் பொழி" என்று ஒரு
சப்தம் வருவதைக் கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து, கருங்கற்கள் நிறைந்த ஒரு பகுதியில் மழையைப்
பொழிந்தது. அங்கிருந்த நீரோடைகளில் ஒன்றில் அந்த நீர் முழுவதும் ஓடியது. உடனே அந்த மனிதர் அந்த
நீர்வழியைத் தொடர்ந்தார்.
அப்போது
ஒரு மனிதர் தமது தோட்டத்தில் நின்றுகொண்டு மண்வெட்டியால் தண்ணீரை
திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார். அவரிடம், "அல்லாஹ்வின்
அடியாரே! உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டார்.
அவர் "இன்னது"
என மேகத்தினிடையே கேட்ட அதே பெயரைச் சொன்னார்.
அப்போது
அவர், "அல்லாஹ்வின் அடியாரே! ஏன் என் பெயரைக்
கேட்கிறீர்?" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் மேகத்தினிடையே உமது பெயரைக் குறிப்பிட்டு, "இன்ன மனிதரின் தோட்டத்தில் நீரைப்பொழி" என
ஒரு சப்தத்தைக் கேட்டேன். அந்த மேகத்தின் நீர்தான் இது. அந்தத் தோட்டத்தி(ன்
மூலம் கிடைக்கும் வருவாயி)ல் நீர் என்ன செய்கிறீர்?"என்று
கேட்டார்.
அதற்கு
அந்தத் தோட்டக்காரர், "நீங்கள்
சொல்வது உண்மையானால், அதன்
விளைச்சலில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தர்மம் செய்கிறேன்.
மற்றொரு மூன்றில் ஒரு பகுதியை நானும் என் மனைவி மக்களும் உண்கிறோம். இன்னொரு
மூன்றில் ஒரு பகுதியை மறுபடியும் விவசாயம் செய்கிறேன்" என்று கூறினார்.
அறிவிப்பாளர்:
அபூஹுரைரா (ரலி) நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் : 5707.
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
பனூ
இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த 'ஜுரைஜ்' என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது
கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற
ஜுரைஜ் மறுத்துவிட்டார். 'நான்
அவருக்கு பதிலளிப்பதா, அல்லது
தொழுவதா?' என்று
(மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின்
தாயார் அவரிடம் வந்து, (தான்
அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), 'இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச்
செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே' என்று
கூறினார். (ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், 'நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்' என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு
கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள்.
அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, 'இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்' என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள்
(வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்)
அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை
(அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளூச் செய்து தொழுதார். பிறகு
அக்குழந்தையிடம் வந்து, 'குழந்தையே!
உன் தந்தை யார்?' என்று
கேட்டார். அந்தக் குழந்தை (வாய்
திறந்து), '(இன்ன)
இடையன்' என்று
கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், 'உங்கள்
ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம்' என்று
(ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ், 'இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்' என்று கூறிவிட்டார்.
அறிவிப்பாளர்:
அபூ ஹுரைரா (ரலி) நூல்:
ஸஹீஹ் புகாரி : 2482, 3436.
உசைர் பின்
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா)
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் "உங்களிடையே உவைஸ் பின் ஆமிர்
(எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?" என்று
கேட்பார்கள்.
இந்நிலையில்
(ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, "நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள்
"ஆம்" என்றார்கள்.
உமர் (ரலி)
அவர்கள், "முராத்
(மூலக்) கோத்திரத்தையும் பிறகு "கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா
(நீங்கள்)?" என்று
கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள்
"ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது
பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?" என்று
கேட்டார்கள்.
அதற்கும்
உவைஸ் அவர்கள் "ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள்
"ஆம்" என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி)
அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "யமன்வாசிகளின்
உதவிப் படையினருடன் "முராத்" (மூலக்) கோத்திரத்தையும் பின்னர்
"கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர்
உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை
குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம்
புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப்
பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப்
பிரார்த்திக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி
பிரார்த்தியுங்கள்.
அவ்வாறே
உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "கூஃபாவிற்கு" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து)
கடிதம் எழுதட்டுமா?" என்று
கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்)
அவர்கள், "சாதாரண
மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று
கூறிவிட்டார்கள்.
அடுத்த
ஆண்டில் "கரன்" குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச்
சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார்.
அப்போது
அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், "மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்)
மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்" என்று
கூறினார்.
அப்போது
உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்"
(மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்த
உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்)
வெண்குஷ்டம் ஏற்பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும்.
அவருக்குத்
தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது
சத்தியம் செய்தால், அல்லாஹ்
அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக்
கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம்
பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப்
பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், "நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து
வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர
வேண்டும்" என்றார்கள்.
"நீர் உமர்
(ரலி) அவர்களைச் சந்தித்தீரா?" என்று
கேட்டார்கள். அவர் "ஆம்"
என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.
அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் அவர்கள்
தமது திசையில் நடக்கலானார்கள்.
தொடர்ந்து
(உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல)
போர்வையொன்றை அணியக் கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம்
"உவைஸ் அவர்களுக்கு இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?" என்று கேட்பார்கள்.
நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் : 4971.